இளைஞர்கள் அரசியலில் நுழைய அடித்தளம் உருவாக்குவோம்

|

சென்னை : ""இளைஞர்கள் அரசியலில் நுழைவதற்கு தேவையான அடித்தளத்தை ஐ.ஜெ.கே., கட்சி அமைத்துத் தரும்,''

தமிழக அரசியல் கட்சிகள், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், பார்க்கவ சமுதாயத்தினரின் ஆதரவுடன் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஐ.ஜெ.கே., கட்சி, திருச்சியில் நடத்தும் மாநாட்டின் மூலம், 10 லட்சம் பேரை ஒருங்கிணைத்து தன் பலத்தை நிரூபிக்கவுள்ளது. ஐ.ஜெ.கே., நிறுவனர் பாரிவேந்தர், சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய மாநாட்டில் நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம். சட்டசபை தேர்தலுக்கு முன் எங்கள் கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களும் அம்மாநாட்டில் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள இரு திராவிடக் கட்சிகளும் எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை வழங்கினால், அக்கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை மேற்கொண்டு சட்டசபை தேர்தலை சந்திப்போம். நாங்கள் 60 சட்டசபை தொகுதிகளில் பலமாக உள்ளோம். எங்களது பலத்தை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.

லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பது, அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவது என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது, ஐ.ஜெ.கே., கட்சி. இதை இரு திராவிடக் கட்சிகளும் ஏற்காவிட்டால், தனித்து போட்டியிடவும், தனி அணியை உருவாக்கவும் தயங்க மாட்டோம். சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியை சந்திக்கவுள்ளோம். எங்களது கட்சி வித்தியாசமானது. அரசியலில் நுழைந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இங்கு இடமில்லை. மாநாட்டில் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்படும். கல்வித்துறையில் நான் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறேன். தற்போது சமுதாயத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன். அரசியலில் நுழைந்து பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு ஐ.ஜெ.கே., கட்சியில் இடமில்லை. இது உறுப்பினர் சேர்க்கையின் போதே தெளிவுபடுத்தப் படுகிறது.

காங்கிரஸ் 1967ம் ஆண்டு ஆட்சியை இழந்த பிறகு தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வரும் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மக்களுக்காக புதிதாக எதையும் செய்யவில்லை. இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இலவசங்கள் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து வருகின்றன. நாட்டை உருவாக்கும் பணியில் இளைஞர் சக்தியை பயன்படுத்தும் திட்டங்களையும் இக்கட்சிகள் செய்யவில்லை. இலவச திட்டங்களால், ஏழைகள் ஏழைகளாகவே வைக்கப்படுகின்றனர். தங்களது தேவைக்கு அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே மக்களை வைத்துள்ளனர். இதனால், மக்கள் வேலை செய்யும் மனநிலையையே இழந்து சோம்பேறிகள் ஆகிவிட்டனர். சுயமரியாதையையும், மதிப்பையும் இழந்து விட்ட ஏழை மக்கள், தேர்தல்களில் தங்களது ஓட்டை விற்கும் நிலைக்கு வந்து விட்டனர். இதனால், படித்த இளைஞர்களும், மாணவர்களும் அரசியலுக்கு வர பயப்படுகின்றனர். அரசியல் போக்கிரிகளுக்கும், கயவர்களுக்குமான இடம் என நினைக்கின்றனர்.

சரியான அடித்தளம் இல்லாமல், அரசியலில் தங்களுக்கு இடமில்லை என இளைஞர்களுக்கும், மாணவர்களும் நினைக்கின்றனர். அந்த இளைஞர்கள் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை எங்கள் கட்சி அமைத்துத் தரும். தற்போதுள்ள அனைத்துக் கட்சிகளிலும் இளைஞர் அணி உள்ளது. ஆனால், மாணவர்கள் அவற்றில் சேர தயங்குகின்றனர். ஏனெனில் இக்கட்சிகளிடம் இளைஞர்கள், மாணவர்களுக்கான கொள் கைகள் மற்றும் திட்டங்கள் இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு நவீன எண்ணங்களும், உலகளாவிய அறிவும் உள்ளது. பழமையான சிந்தனைகளை உடைய கட்சிகளில், அவர்களுக்கு இடம் இருப்பதில்லை. நன்கு படித்த இளைஞர்களை ஈர்க்கும் வகையில், கட்சிகள் கொள்கையை வகுக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் அரசியலில் பங்கு பெற இடம் ஏற்படுத்தித் தர வேண்டும். ஐ.ஜெ.கே., கட்சி இளைஞர்களுக்கான சரியான தேர்வு. அரசியலில் அறிவாளிகள் மிகவும் குறைவு. அப்துல் கலாம், மன்மோகன் சிங் என ஒரு சிலரே உள்ளனர். அரசியல்வாதிகள் வெற்றி பெற பணத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர். மக்கள் தங்களது ஓட்டுரிமையை செயல்படுத்த பணம் பெறுகின்றனர்.

லஞ்ச சமுதாயம் உருவாகக் காரணமாக இந்த முறை உடைக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதற்கு பணத்தை செலவழிக்கும் போது, வெற்றி பெற்ற பிறகு இயல்பாகவே ஊழல்வாதிகள் ஆகி விடுகின்றனர். அவர்கள் ஊழல்வாதிகள் ஆகி, கமிஷன் எதிர்பார்க்கும்போது, வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்து, மக்களுக்கு தரமற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடைக்கின்றன. ஐ.ஜெ.கே., கட்சி புரட்சிகரமான கல்வித் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்படி, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கு சம வாய்ப்பும், உயர்தரக் கல்வியும் வழங்கப்படும். உயர்தரக் கல்விக்காக செலவிட முடியாத ஏழைகளுக்கு அரசு உதவ வேண்டும். இதன்மூலம், மற்ற பட்ஜெட் செலவுகளை குறைக்க முடியும். ஐ.ஜெ.கே., கட்சி விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கும். விவசாயத்தை இளைஞர்களும் விரும்பி ஏற்கும் தொழிலாக மாற்றும் திட்டங்களை உருவாக்கும். பொறியியல் கல்லூரிகளைப் போல, நிறைய வேளாண்மை கல்லூரிகள் ஏற்படுத்தப்படுவதுடன், அக்கல்லூரியில் சேர்ந்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அறிவியல் முறையிலான வேளாண்மை, குளிர்படுத்தப்பட்ட சேமிப்பு வசதி, உணவு பதப்படுத்தும் முறை ஆகிய நடைமுறைகளுக்கு மாற வேண்டிய நேரம் இது. இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.